இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 கிலோ எடை கொண்ட ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ சமையல் காஸ் சிலிண்டருக்கு, பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் வீடு வரை வினியோகம் செய்யும் புதிய திட்டம் சில பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியன் ஆயில் வீட்டு பயன்பாட்டிற்கு 14.2 கிலோ, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கு பொதுவாக 3 முதல் 4 நாட்களுக்குள் வினியோகம் நடைபெறுகிறது.
‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ என்பது புதிதாக அறிமுகமான 10 கிலோ ‘காம்போசிட்’ சிலிண்டர். இது கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வினியோகத்திற்கு வந்துள்ள நிலையில், இதற்கான 4 மணி நேர வினியோக முறை கடந்த ஜூலையில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சிலிண்டர் தேவைப்படுவோர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





