கடந்த காலாண்டில் இந்தியா 7.8% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் உலகிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு களமாக உருவெடுக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த கருத்துகளை அவர் டெல்லியில், அரசு முறை பயணமாக வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்திய பின்னர் வெளியிட்டார்.

இந்தியா–பெல்ஜியம் உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெற்று வருவதாக மோடி கூறினார். மேலும், இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை ஒரு முக்கிய மைல்கல்லாக அவர் குறிப்பிட்டார். செமிகண்டக்டர் துறையிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்றார்.

உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய மோதல் உள்ளிட்ட பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விருப்பம் உள்ளதாக கூறினார். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்றாலும், அந்த தொடர்பு வர்த்தகத்தைத் தாண்டி பகிர்ந்த வரலாற்றில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.