புதுடில்லி: இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா இந்தியாவுக்கு சாதகமான சுங்கச் சலுகைகளை வழங்கிய பிறகே இறுதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் முழுமையான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. ஒப்பந்தம் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள அம்சங்களை முடிக்க அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் வர்த்தகப் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் விகிதங்களை ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு சாதகமான சுங்கவரி விகிதங்களை அமெரிக்கா வழங்கத் தயாரானவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்து விவரங்களை அறிவிப்போம் என்று கோயல் கூறினார்.

மேலும் இந்தியாவின் பரந்த வர்த்தகத் திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உலக வர்த்தகத்தின் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்கு முன்னுரிமை அணுகலை வழங்கும் என்றும், கனடா, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகளுடன் புதிய ஒப்பந்த முயற்சிகள் மற்றும் ஆசியான், கொரியா, ஜப்பான் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதும் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

நியூசிலாந்துடன் உள்ள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், அதன் பின்னர் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து, மொரிஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.