கேரள அரசு போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) டிரைவர் ஒருவர் தனது பணியின் கடைசி நாளில் பஸ்சுக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடை கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவை சேர்ந்த பால் குரியன், செப்டம்பர் 2 அன்று பணி ஓய்வு பெற்றார். கடைசி நாளில், 18 ஆண்டுகளாக தானே ஓட்டிய பஸ்சில் இருந்து இறங்கி, அதைச் சுற்றி நடந்தார்.

வீடியோவில், பஸ்சின் நான்கு பக்கங்களிலும் உள்ள டயர்களைத் தொட்டு வணங்குவது காணப்படுகிறது. பின்னர் பஸ்சின் முன்பகுதியில் சில நொடிகள் சாய்ந்து நின்று, அதற்கு முத்தமிட்டு தனது பணியை நிறைவு செய்தார்.

தன் தொழிலுக்கும், பல ஆண்டுகள் தன் வாழ்வாதாரமாக இருந்த வாகனத்திற்கும் அவர் காட்டிய மரியாதை அங்கு இருந்தவர்களை நெகிழ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி பதிவான வீடியோ தற்போது பரவலாக பகிரப்படுகிறது.