மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவிலான முறைகேடு நடந்ததாக உள்ள புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணையை நான்கு மாதங்களுக்குள் முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, சிறைவாசிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து உருவானது. 2016 முதல் 2021 வரை கைதிகள் தயாரித்த எழுதுபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் நீதிமன்றங்கள், அரசு துறைகளுக்கு அனுப்பியதாகவும், கைதிகளுக்கு ஊதியம் வழங்கியதாகவும் போலி கணக்குகள் தயாரித்து பெரும் அளவில் முறைகேடு நடந்ததாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

முன்னதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கில் முகாந்திரம் இருந்தால் ஊழல் தடுப்பு துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யலாம் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு முன் நடந்த விசாரணையில், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது.

இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, விரிவான விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைத்து நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்குடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் குறிப்பிட்டது.