உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியான கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து அபாயக் கட்டத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கங்கையின் வெள்ளப்பெருக்கு நிலவரம் மற்றும் முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர தேவைகள் தாமதமின்றி கிடைக்கச் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டார்.