ரஷ்யாவில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடையில் நின்றிருந்த ரோபோவை வாடிக்கையாளர் லேசாக பின்னுக்கு தள்ளியதும், அது எதிர்பாராத விதமாக ஆவேசமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ரோபோ ‘கிக் பாக்ஸிங்’ வீரரைப் போல சண்டைக்கு தயாரான நிலையில் நின்று, வாடிக்கையாளரை காலால் எட்டி உதைக்க முயன்றதாக செய்தி கூறுகிறது. இதனால் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரோபோவை கட்டுப்படுத்த ஊழியர்கள் முயன்றாலும் அது அவர்களது பிடியில் இருந்து திமிறி, வாடிக்கையாளரை நோக்கி முன்னேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் விபரீதம் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில், கடை உரிமையாளர் ரோபோவின் பேட்டரியை ‘ஆஃப்’ செய்து அதை நிறுத்தினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், கேலி கலந்த கருத்துகளும் குவிந்துள்ளன. மேலும் சிலர், யாரோ ஒருவர் ரோபோவை ‘ரிமோட்’ மூலம் இயக்கியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.





