தமிழக சட்டசபை வரலாற்றில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையை திருப்பூர் வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா பெற்றார்.
சட்டசபையில் சபாநாயகராக பிரபாகர், துணை சபாநாயகராக ரவி சங்கர் உள்ளனர். இருவரும் இல்லாத நேரங்களில் சபையை நடத்துவதற்காக, மாற்றுத் தலைவர்களின் பட்டியலை சபாநாயகர் முன்பே அறிவித்திருந்தார்.
நேற்று கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது சபாநாயகர் பிரபாகர் வெளியே சென்றார். துணை சபாநாயகரும் இல்லாததால், மாற்றுத் தலைவர்களின் பட்டியலில் இருந்த சத்தியபாமா சபையை நடத்தும் பொறுப்பை ஏற்றார்.
அவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபோது, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் மேஜையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆசனத்தில் ஒரு பெண் அமர வேண்டும் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பு எனக் கூறி வாழ்த்தினார்.
சிறிது நேரத்தில் சபைக்கு திரும்பிய சபாநாயகர் பிரபாகர், மாற்றுத் தலைவர் சபையை சிறப்பாக நடத்தினார் என பாராட்டினார். இவ்வாறு வாய்ப்புகள் வழங்கப்படுவதால் பலருக்கும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவரை அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.





