சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்க இந்திய பார் கவுன்சிலும் மாநில பார் கவுன்சில்களும் அதிகாரம் கொண்டவை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட பின்னரே பார் கவுன்சில்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உருவாகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து உருவானது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டது.
இதையடுத்து, போராட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை 2026ல் தேர்ச்சி பெறும் மாணவர்களை மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யக் கூடாது என இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த சுற்றறிக்கையை சில மணி நேரங்களிலேயே பார் கவுன்சில் திரும்ப பெற்றது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு, சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களின் கல்வி நிறுவனம் அல்லது அதன் விதிகள் மற்றும் துணை விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியிடமே இருப்பதாகக் கூறியது. சட்டம் படித்தவர் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட பிறகே அவர்மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது.





