ஹைதராபாத்: தெலுங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, அவரது மகள் சுஷ்மிதா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியை விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பார்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, அத்தொகுதி எம்எல்ஏ ரேவரி பிரகாஷ் ரெட்டியை அடுத்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சுஷ்மிதா, முதல்வர் ஏன் கொண்டா பகுதிக்கு வர வேண்டும், ஏன் பிரகாஷ் ரெட்டியை மீண்டும் தேர்வு செய்யச் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், முதல்வரும் அவரது சகோதரரும் அரசை சுரண்டுவதாகவும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் தரகர்களாக இருந்து தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த கருத்துகள் வெளியானதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி (பிஆர்எஸ்), பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் சுரேகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது; அதற்கு அவர், சுஷ்மிதாவின் கருத்துகள் அவரது தனிப்பட்டவை என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், கொண்டா சுரேகாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி, கவர்னர் சிவ பிரதாப் சுக்லாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.