கச்சத்தீவு தொடர்பாகவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் தமிழக சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறினார். இதற்கு அமைச்சர் ஆனந்த், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தி.மு.க. தானா என கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. உறுப்பினர் வேலு, கச்சத்தீவு வழங்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் என்றும், அதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தி.மு.க. போராட்டமும் நடத்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மத்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்தபோது அன்றைய தி.மு.க. அரசு அமைதி காத்ததாகவும், கருணாநிதியின் ஒப்புதலுடன் தான் அது நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். அப்போது மக்களிடம் விளக்கி, சட்டசபை தீர்மானம் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரம், 2008ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதற்கு மத்திய அரசு பதிலளித்தபோதும் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட், கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது; அதனை வழங்கி விட்டு 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ‘வெட்ஜ் பேங்க்’ பெறப்பட்டதாக கூறி, அதனால் ஏற்பட்ட பொருளாதார பயன் பற்றி பேசப்படுவதில்லை என்றார். தி.மு.க. உறுப்பினர் கோவி செழியன், அமைச்சர்கள் ‘ரீல்ஸ்’ போடுவதற்காக பேசுகிறார்கள் என விமர்சித்தார்.





