இந்திய நாட்டினருக்கான வேலைவாய்ப்பு சார்ந்த EB-1 க்ரீன் கார்டுகள் வழங்கும் பணியை வரும் வாரங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அதிகரித்ததே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 1.40 லட்சம் வேலைவாய்ப்பு சார்ந்த க்ரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும், எந்த ஒரு நாட்டுக்கும் மொத்த எண்ணிக்கையின் 7% க்கும் அதிகமாக வழங்கக் கூடாது என்ற வரம்பும் நடைமுறையில் உள்ளது.
க்ரீன் கார்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ளதாகவும், நிலுவை பட்டியலில் 79% பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், EB-1 பிரிவில் இந்தியாவிலிருந்து வரும் விண்ணப்பங்கள் அதிகரித்தால், செப்டம்பர் 30 அன்று முடிவடையும் அமெரிக்க நிதியாண்டு முடிவதற்குள் இந்தியாவுக்கான குறிப்பிட்ட எண்ணிக்கை தீர்ந்து விடக்கூடும் என அதிகாரிகள் கூறினர்.
EB-1 பிரிவு அறிவியல், கலை, வணிகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் வகையாகும். அறிவிக்கப்பட்டுள்ள இடைநிறுத்தம் ஏற்பட்டால் அது தற்காலிகமானதாகவும், ஆண்டுக் கோட்டா மற்றும் விண்ணப்பங்களின் வேகத்துடன் தொடர்புடையதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





