கோவை: ஹிந்து கோவில்களில் கிடைக்கும் வருவாய், ஹிந்து சமூகத்தின் நலன், சேவை திட்டங்கள் மற்றும் கோவில் பராமரிப்பு உள்ளிட்ட கோவில் சார்ந்த பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) தேசிய பொது செயலாளர் (அமைப்பு) மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.

மதுக்கரை–குரும்பபாளையம் சாலை சிவகிரி வீர வினாயகர் கோவிலில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சியில் அவர் சேவையை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட மக்களின் சுகாதார தேவைக்காக இந்த சேவை தொடங்கப்பட்டதாகவும், அடுத்த மாதம் திருச்சியிலும் இதே சேவை தொடங்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சேவை திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது அமைப்பு ரீதியான சுற்றுப்பயணம் நடைபெறுவதாக கூறிய பராண்டே, நாடு முழுவதும் அமைப்பை விரிவுபடுத்த குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கிராமங்களுக்கு செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டிசம்பருக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானோரை அமைப்பில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் அக்டோபர் 1 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அடுத்தாண்டு வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும், சுகாதாரம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் 7,000-க்கும் மேற்பட்ட சேவை திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறி, அதைத் தடுக்க வலுவான சட்டம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இறைச்சிக்காக பசுக்களை சட்டவிரோதமாக கடத்துவதைத் தடுக்க காவல் சோதனைச் சாவடிகளை அதிகரித்து, இதில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார். பக்தர்கள் வழங்கிய நிலம் கோவில் சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; மாற்று பயன்பாடு தெரிய வந்தால் அரசு உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.