சென்னை: விளையாட்டுத்துறைக்கு, குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் விளையாட்டு முன்னெடுப்புகள் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், உலகத் தர கார் பந்தய போட்டிகளுக்கான சூழல் தமிழகத்தில் இருப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். கார் உற்பத்தி ஆலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உப தொழிற்சாலைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும், உலகத் தர மோட்டார் பந்தய அரங்குகள் அமைந்தால் சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், விளையாட்டு சுற்றுலாவை வளர்த்திடவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து பயிற்சிகள் வழங்கவும் புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி” உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நகரத்தில் சர்வதேச தர பந்தயத் தடம், நவீன உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் அமைக்கப்பட்டு, பார்முலா 1 முதல் பார்முலா 4 வரை போட்டிகள் நடத்த தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்த அஜித்குமார், இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து முறையாக வளர்த்தெடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார். குறிப்பாக, பிரத்யேக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது தன்னை மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் கூறினார்.
கார் ரேஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் தொடர்பான புகழ்பெற்ற வாசகத்தை மாற்றி, “தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என அவர் குறிப்பிட்டார். முதல்வர் விஜயின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் வெற்றி பெற வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.





