சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அமைச்சர்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் தமிழக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பதிலளிக்க இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளதாகக் கூறி, நன்றாகத் தயாராகி வர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜயே தன் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார்.
இதற்கு சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு, முதல்வர் விஜய் அமைதியாகக் கவனித்து வருவதாகவும், பதிலளிக்கத் தயாராகவே வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு என்பதால் எந்த அமைச்சரும் பேசலாம் என்றும் அவர் நினைவூட்டினார்.
பின்னர் முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வரும் திங்கள்கிழமை பதில் அளிப்பதாக தெரிவித்தார். தாம் சபையில் இல்லாவிட்டாலும் யார் என்ன கேட்கிறார்கள் என்பது தன்னிடம் வந்து சேரும்; அதற்கு தெளிவான விளக்கம் தருவேன் என்றும் கூறினார். அப்போது யாரும் எழுந்து ஓடி விடக்கூடாது எனவும் அவர் சொன்னார்.
இதற்கு உதயநிதி, “யாரும் ஓடக்கூடாது” என்று சொல்லிவிட்டு முதல்வரே ஓடி விட்டார் என எதிர்வினையாற்றினார். அமைச்சர் ராஜ்மோகன் விவாதத்தில் கலந்து கொண்டு, 100 நாட்களில் பாரபட்சமில்லாமல் நேர்மையான ஆட்சி நடக்கிறது எனக் கூறியதுடன், உதயநிதி துணை முதல்வராக இருந்த காலத்தில் அவருக்குப் பதிலாக முதல்வராக இருந்த ஸ்டாலின் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்ததாகவும் குறிப்பிட்டார்.





