நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பனிச்சரிவு அபாயம் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் (GLOF) தொடர்பான ஆபத்துகளை எதிர்கொள்ளும் தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், அருணாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலர்கள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் பாதுகாப்பு புவிதகவல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதிக ஆபத்து வாய்ப்புள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் பனி படர்ந்த பகுதிகளை கண்காணித்தல், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்தல், எச்சரிக்கைகள் மக்களிடம் இறுதி நிலை வரை சென்று சேர்வதை மேம்படுத்தல், அதிக அபாய இடங்களை கண்டறிதல், வெள்ள நீர் பாயும் பாதைகள், மக்கள் வெளியேற்றத் தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எச்சரிக்கைகளின் அடிப்படையில் உடனடி மற்றும் திறம்பட்ட நடவடிக்கை உறுதி செய்ய மாநில முகமைகள், மாவட்ட நிர்வாகங்கள், அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை பேணுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2024ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்த GLOF தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும், அதிக அபாய காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பனிப்பாறை ஏரிகள் மற்றும் பனிச்சரிவு அபாய பகுதிகளை தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கையுடன் கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





