திமுகவில் அதிகாரமிக்க மாவட்டச் செயலர் பதவிகளில் தலித் சமுதாயத்தினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கட்சியின் தலித் நிர்வாகிகள் மறுசீரமைப்பு குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது திமுகவில் உள்ள 77 மாவட்டச் செயலர்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மட்டுமே இருப்பதாகவும், இதனால் அந்தப் பதவியில் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்டச் செயலர் பதவிகளின் எண்ணிக்கையை திமுக 110 ஆக உயர்த்தியுள்ள நிலையில், தலித் மக்கள் அதிகமாக வாழும் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில் குறிப்பாக 20% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சமூக நீதியை முன்னிறுத்தும் கட்சியாக இருந்தாலும், தலித் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாததால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் திமுக வெற்றி பெறவில்லை என்றும், கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவால் 11 தொகுதிகளில் வெற்றி கிடைத்ததாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், மாவட்டச் செயலர் பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பணபலமும் ஜாதி பலமும் உள்ளவர்களே வெற்றி பெறும் சூழல் உருவாகலாம் எனக் கவலை தெரிவித்த அவர்கள், இதைத் தவிர்க்க 20% ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர்.




