பொருளாதார சார்புநிலை குறித்து இந்தியா முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்ததாகவும், அதன் விளைவுகளை இப்போது எதிர்கொண்டு வருவதாகவும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணத்தில் உள்ள அவர், டெல்லியில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார். கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பாவில் “தீவிரமான விழிப்புணர்வு” உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக உற்பத்தி செலவை விட குறைவான விலையில் அதிகப்படியான உற்பத்தி திறன் சந்தைகளில் குவிக்கப்பட்டதால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களை அதிகமாக சார்ந்திருக்கும் நிலை உருவானதாகவும் அவர் கூறினார். இத்தகைய சார்புநிலை பொருளாதார உறவுகளை அரசியல் அழுத்தக் கருவிகளாக மாற்றும் வாய்ப்பையும் உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அபாயங்களை பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பாவுக்கு எச்சரித்திருந்தாலும், அப்போது அது கவனிக்கப்படவில்லை; ஆனால் இப்போது ஐரோப்பா செவி சாய்க்கிறது என டி வெவர் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், இந்தியாவை மிக முக்கியமான நம்பகமான கூட்டாளியாக பெல்ஜியம் கருதுகிறது என்றும் அவர் கூறினார்.