தமிழகம் முழுவதும் உள்ள 4,292 கோவில்களின் வரவு–செலவு கணக்குகளுக்கான தணிக்கை அறிக்கைகள், அறநிலையத்துறை (HR&CE) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் துறை தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களினதும் ஆண்டு வருவாய் மற்றும் செலவினக் கணக்குத் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ தலைவர் டி.ஆர். ரமேஷ் 2023-ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துறை சார்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் ஆர். பரணிதரன், இதுவரை 4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன; அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவித்தார்.

மேலும், ரூ.10,000-க்கு குறைவான வருமானம் உள்ள கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்றும், முழு விவரங்களுடன் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.