இந்தியாவின் புவி கண்காணிப்பு திறனை வலுப்படுத்தும் வகையில், இஓஎஸ்-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2:55 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது.

18 நிமிடங்கள் 34 விநாடிகள் பயணித்த பின்னர், மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து செயற்கைக்கோளை பிரித்தது. அதிகாலை 3:14 மணியளவில், 19.8 டிகிரி சாய்வுடன், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் இஓஎஸ்-05 நிலைநிறுத்தப்பட்டது.

பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ்-05, இந்தியாவின் நிலப்பரப்பை மிகத் துல்லியமாக படம்பிடித்து தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு இஸ்ரோ ‘வானத்தின் கண்’ என்ற செல்லப்பெயரை வழங்கியுள்ளது.

வெள்ளம், புயல், மேகவெடிப்பு, இடி-மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும். மேலும், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பான முக்கிய தரவுகளை சேகரிப்பதற்கும் பயன்படும்.

இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420.5 டன் எடையும் கொண்டது. இது இஸ்ரோவின் 19வது ஜிஎஸ்எல்வி ஏவுதலாகும்; ராக்கெட்டின் மேல் நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.