ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் “அடுத்த பாய்ச்சலுக்கு” இஸ்ரோ தயாராகி வருவதாக தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான சேவைகளை வழங்குவதோடு, மேலும் பெரிய சாதனைகளையும் நோக்கி நகர்வதாக அவர் கூறினார்.
நாட்டு மக்களுக்கு காலை வணக்கம் தெரிவித்த அவர், சூரிய உதயத்திற்கு முன்பே இந்த ஏவுதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் இஸ்ரோ தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத், கிரண்குமார் ஆகியோர் இந்த வெற்றியை நேரில் காண வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறி, இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான ஏவுதல் இதுவென அவர் கூறினார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நிதியாண்டில் இங்கிருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், தொழில்துறையினர் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்புகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
“அதிக வேலைக்கான பரிசு இன்னும் அதிக வேலை” என்ற பழமொழியை நினைவூட்டி, முன்னால் பல பணிகள் உள்ளன என்றும், அவற்றை தொடர்ந்து செய்து நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.





