உக்ரைனின் கீவ் நகருக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அல்லது வாங்காமல் இருப்பது மட்டும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராது என்று தெரிவித்தார்.
ரஷ்யா–உக்ரைன் மோதல் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது. 2022ல் போர் தொடங்கியதிலிருந்து இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருகிறது; குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான எரிசக்தியை பெறுவது இந்தியாவின் உரிமை என மத்திய அரசு விளக்கம் அளித்து வந்தது.
உக்ரைனில் ஜெய்சங்கர், அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்தால் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைப்பதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். உலகளவில் எரிசக்தி நிலைமை கடினமாக உள்ள நிலையில், 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்வது பெரிய சவால் என அவர் கூறினார்.
மேலும், ஒரு நாடு எண்ணெய், அலுமினியம், கனிமங்கள், உலோகங்கள் அல்லது உரங்களை வாங்குகிறதா இல்லையா என்பதைக் கொண்டு ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் போர் முடிவுக்கு வராது என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்; அதற்கான முயற்சிகளை இந்தியா ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





