புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை (எப்.சி.ஆர்.ஏ.) திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜேபிசி) அமைக்கப்பட்டுள்ளது. பீஹாரின் பெட்டியா தொகுதி பாஜ எம்பி சஞ்சய் ஜெயஸ்வால் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை விவாதத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய ஜேபிசிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுவை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்; இரு அவைகளிலிருந்தும் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் 31 உறுப்பினர்களில் லோக்சபாவிலிருந்து 21 பேரும், ராஜ்யசபாவிலிருந்து 10 பேரும் உள்ளனர். இதில் பாஜவிலிருந்து 14 எம்பிக்களும், காங்கிரஸிலிருந்து ஐந்து எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர். ஜேடி(யு), திரிணமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு எம்பிக்களும், சமாஜ்வாதி கட்சி, ஐயுஎம்எல், சிவசேனா, என்சிபி (எஸ்பி), என்சிபி மற்றும் டிடிபி ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒரு எம்பியும் உள்ளனர்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையை லோக்சபாவில் சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளை தனிநபர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் பெறவும் பயன்படுத்தவும் உள்ள விதிகளை மேலும் கடுமையாக்க முனைவதாக கூறப்படுகிறது. உரிமம் ரத்து/காலாவதி/ஒப்படைப்பு ஆகிய சூழலில் வெளிநாட்டு நிதியால் வாங்கிய நிலம், கட்டிடம் உள்ளிட்ட சொத்துகளை அரசு நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைப்பது, உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் வெளிநாட்டு நிதி பெறுதல்/பயன்படுத்துதல் மீது உடனடி தடை, மேலும் விதிமீறல் விசாரணைக்கு மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயம் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.





