மஹாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் ஆகாஷ்வானி பகுதியில் உள்ள ஆசியன் மருத்துவமனையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில் மருத்துவமனையின் பிரசவ வார்டில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் பதற்றமின்றி செயல்பட்டு, 9 பச்சிளம் குழந்தைகளை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர்.

மேலும், ஐசியூ உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளையும் எச்சரித்து, மொத்தம் 58 பேரை மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தினர். தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை; தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செவிலியர்களின் மீட்பு நடவடிக்கையை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.