புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு வாகனத் துறை முக்கிய துாணாக மாற வேண்டும்; அதற்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான ‘சியாம்’ (SIAM) நடத்திய 66வது ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், பொருளாதாரம் வளர்வதுடன் மக்களின் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறினார். நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக விரிவடைவதால் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து எளிதாகி, வாகனத் துறைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன என்றார்.

மாசற்ற, நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் வாகனத் துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் சார்ஜிங் வசதிகள் விரைவாக விரிவாக்கப்படுவதால் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது தொழில் துறைக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறினார். உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI), ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் உற்பத்தித் திறனை வலுப்படுத்தியுள்ளதாகவும், சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தை வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர், மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை பெரிய அளவில் ஊக்குவிக்க வாகனத் துறை கவனம் செலுத்த வேண்டும் என்றார். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.