பதவி நீக்க நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு பதவியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் மற்றும் ஓய்வூதிய தொடர்பான பலன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதிக் வீரா தாக்கல் செய்த மனுவில், பதவி நீக்கம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க ராஜினாமா அளிக்கும் நிலையில், அந்தப் பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் பிற வசதிகளை தொடர்ந்து பெறுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜினாமாவுக்குப் பிறகும் இத்தகைய பலன்கள் தொடர்வது அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதன் மூலம் பொது வாழ்வில் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால், பிற அரசு ஊழியர்கள் போலவே பதவி நீக்க நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

விசாரணையில், சாதாரண அரசு ஊழியர்கள் அல்லது அரசியலமைப்பு சாராத பதவி வகிப்பவர்கள் மீது துறைரீதியான விசாரணை அல்லது பதவி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தால் ராஜினாமா செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை; ஆனால் உயர்ந்த பொறுப்பில் உள்ள அரசியலமைப்பு நிர்வாகிகள் மட்டும் எளிதில் ராஜினாமா செய்து முழு சலுகைகளையும் பெறுவது நியாயமற்றது என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.