தமிழ்நாடு சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து, காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துடன் இணைந்து நடந்த கலந்துரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்க அரசு இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதாகக் கூறி, தயாராக வந்து பதிலளிக்க வேண்டும் என்றார். இதற்கு சபாநாயகர் பிரபாகர், முதல்வர் விஜய் அமைதியாக கவனித்து வருகிறார்; பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
உதயநிதி, தன் கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும், அமைச்சர்களே பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் 2020–2022 ஆண்டுகளில் கொலை எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
முந்தைய ஆட்சியுடன் ஒப்பிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் தவறு இல்லை என்று சபாநாயகர் கூறினார். தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அரசு தாக்கல் செய்த மனுவில் ‘முஸ்லிம் கைதிகளை வெளியே விட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்’ என கூறப்பட்டதாகவும், அப்போது டி.ஜி.பி. நியமனம் தொடர்பாகவும் விமர்சனம் முன்வைத்தார்.
இதற்கிடையில் முதல்வர் விஜய், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரும் திங்கள் கிழமை பதில் அளிப்பதாகவும், தெளிவான விளக்கம் தருவதாகவும் கூறி, அப்போது யாரும் எழுந்து செல்லக் கூடாது என குறிப்பிட்டார். இதற்கு உதயநிதி, ‘யாரும் ஓடி விடக் கூடாது’ என்று சொல்லிவிட்டு முதல்வர் ஓடி விட்டார் என பதிலளித்தார். அமைச்சர் ராஜ்மோகனும் விவாதத்தில் கலந்து கொண்டு, முதல் 100 நாட்களில் பாரபட்சமில்லாமல் நேர்மையான ஆட்சி நடக்கிறது என கூறினார்.





