இந்தியாவிலேயே தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் பார்வை என அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பல மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் கவனித்து வருவதாகவும் கூறினார்.
சட்டசபையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டிய அமைச்சர், முதல் முறையாக மாற்றுத் தலைவராக ஒரு மகளிர் அவையை நடத்தினார் என்றும், அடுத்த நாளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவையை நடத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் “எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்” என்ற முதல்வரின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக கூறிய அவர், கடந்த இரண்டு நாட்களாக அவையில் நடந்த நிகழ்வுகள் அந்த இலக்கின் தொடர்ச்சியே எனவும் சொன்னார். மேலும், தமிழகத்தை சிறந்த முறையில் வழிநடத்தக்கூடிய முதல்வராக விஜய் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





