தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான முக்கிய தகவல்களை மூன்று மாதங்களுக்குள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்கள் இணையதளத்திலும், கோவில்களின் அறிவிப்பு பலகைகளிலும் வெளியிடப்பட வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சில விவரங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதை விசாரித்த தகவல் ஆணையர் இளம்பரிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே தகவல் வெளியீடு அவசியம் எனக் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவின்படி, கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றின் விவரங்கள், குத்தகைதாரர் தகவல்கள் மற்றும் வாடகை நிலுவைத் தொகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வரும் வகையில் வெளியிடப்பட வேண்டும். மேலும் வங்கி வைப்பு நிதி விவரங்கள், சேமிப்பு கணக்கு எண்கள் மற்றும் உபயதாரர்கள் வழங்கிய நன்கொடைகள் பற்றிய தகவல்களும் இடம்பெற வேண்டும்.
அர்ச்சகர்கள் உள்ளிட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் விவரங்கள், சேவை கட்டணங்கள், வரவு-செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், அறங்காவலர் குழு தீர்மானங்கள் ஆகியவற்றையும் வெளிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, அறநிலையத் துறையின் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவுகளும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்குமாறு வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நடை திறக்கும் நேரம், பூஜை காலங்கள், திருவிழாக்கள், ஸ்தல வரலாறு உள்ளிட்ட 11 வகை தகவல்களை கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பதாகைகள் அல்லது அறிவிப்பு பலகைகளில் தெளிவாக ஒட்ட வேண்டும் எனவும் உத்தரவு தெரிவிக்கிறது. இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களுடன், HR&CE கமிஷனர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரும் இணை ஆணையருமான தங்கம், நவம்பர் 30 அன்று மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





