புதுடில்லி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) லட்டு கலப்பட வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தேவஸ்தான அதிகாரிகள் சிலர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல்கள் ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

முன்னாள் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளர் சின்ன அப்பண்ணா மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த தொடர்ச்சியாக, தேவஸ்தான துணை செயல் அலுவலர் லோகநாதம் மற்றும் அவரது உறவினர்களுடன் தொடர்புடைய திருப்பதியில் உள்ள நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. லோகநாதத்தின் மனைவி பெயரில் வாங்கப்பட்ட வீடு மற்றும் வீட்டுமனைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அவரது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணங்கள் மற்றும் லோகநாதம், அவரது மகன் பெயரில் இருந்த நான்கு நிலையான வைப்பு தொகைகளுக்கான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. ரூ.31.9 லட்சம் மதிப்பிலான கூட்டுச் சொத்து ஆவணமும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் 2 கிலோ தங்கம், ரூ.12.5 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.5 கோடியை கடந்ததாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.