தமிழகத்தில் மாநில கலந்தாய்வு முடிந்த பிறகு காலியாக இருந்ததால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்ட ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ (உயர் சிறப்பு) மருத்துவப் படிப்புகளின் இடங்கள் தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டும் இன்னும் நிரம்பாமல் உள்ள இடங்களை தமிழக அரசிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
விசாரணையில், தமிழகத்தால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டு நிரம்பாமல் உள்ள அனைத்து இடங்களும் மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு தரப்பு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
அதே நேரத்தில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.





