தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டில்லிக்கு ஆகஸ்ட் 4 அன்று வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென சுமார் 300 அடி கீழிறங்கி கடுமையாக குலுங்கியதில் 24 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மத்திய அரசின் விமான விபத்து விசாரணை அமைப்பு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏ.ஐ. 2379 என்ற இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து 145 பேர் இருந்தனர். சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் தொடர்ச்சியாக அழுத்தம் குறைந்ததால் தானியங்கி இயக்க அமைப்பு துண்டிக்கப்பட்டதாக விசாரணை கூறுகிறது.

அறிக்கையின்படி, விமானம் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட 372 அடி மேலே சென்ற பின்னர், அதிகபட்சமாக 292 அடி வரை கீழே பாய்ந்தது. சில விநாடிகளில் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும், பின்னர் விமானம் டில்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ நேரத்தில் சீட் பெல்ட் அணியுமாறு எச்சரிக்கை விடப்படாததால் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 20 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

குரல் பதிவு கருவி, விமானத் தகவல் பதிவு கருவி உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன; ஹைட்ராலிக் உதிரி பாகங்கள் ஆய்வுக்காக அகற்றப்பட்டுள்ளன. சம்பவ நேரத்தில் மோசமான வானிலை குறித்து விமானக் குழுவினரோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினரோ தெரிவிக்கவில்லை என்றும், போதைப்பொருள் பரிசோதனையில் துணை விமானியின் மாதிரி சரியாக இருந்த நிலையில் விமானியின் ஆரம்ப மற்றும் உறுதிப்படுத்தும் ரத்த பரிசோதனைகள் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதி செய்ததாகவும் அறிக்கை கூறுகிறது; உரிய நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்கிறது.