பீஹாரில் வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை தொடர்வதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைநகர் பாட்னாவில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கங்கை மட்டுமல்லாமல் கோசி, கண்டக் ஆறுகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சரண் மாவட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, சாப்ரா நகரின் தாழ்வான பகுதிகளை பாதித்துள்ளது.
ரேவல்கன்ஜ், சோன்புர், சாப்ரா சாதர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகவும், சில இடங்களில் சுமார் இரண்டு அடி உயரம் வரை நீர் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்கள், குடிநீர், மருந்துகள் மற்றும் தடுப்பூசி வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை உறுதி செய்ய மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





