சென்னை: தமிழக அமைச்சர்கள் “ரசிகர் மன்ற தலைவர்கள் போல” நடந்து கொள்வதாகவும், அது சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா, 2005ஆம் ஆண்டில் பட்டாசு தொழிலாளர்களுடன் முதல்வர் விஜய் அமர்ந்து பேசிய புகைப்படத்தை முன்வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என அவர் குற்றம்சாட்டினார். இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்களின் நலன் விரும்பி என்ற படிமத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது என்றும் கூறினார்.
அதே நேரத்தில், தன் துறையை முறையாக கவனிக்காமல் விட்டதற்கான சான்றாகவே இந்த விபத்துகள் இருப்பதாகவும், லஞ்சம் வாங்காமல் ‘லைசென்ஸ்’ கொடுத்தோம் என்று கூறுவது மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்தார். பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை முறையாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி அதிகரிக்கும் சூழலில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.





