சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பணிகளை போற்றி கௌரவிப்போம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனது அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதை அவர் நினைவூட்டினார். மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலம் கருதாது ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும் கூறினார்.

மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், சமூகப் பொறுப்பு போன்ற உயரிய பண்புகளை விதைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என முதல்வர் தெரிவித்தார். மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தையும் அமைத்துத் தருகிறார்கள் என்றார்.

நாட்டின் வளர்ச்சியோடு இணைந்து ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் சிறந்த வழிகாட்டுதலும் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும் என அவர் வாழ்த்தினார்.