‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று (செப்.5) சென்னையில் நடைபெறுகிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்.
நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டு பயணத்தை இந்த விழா குறிக்கிறது.
விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் தலைமை வகிக்கிறார். ‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றுகிறார். ‘தினமலர்’ வேலூர் பதிப்பாளர் ஆர்.ஆர். கோபால்ஜி நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும், ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டு கால பயணம் மற்றும் பாரம்பரியம் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார். நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உள்ளிட்ட வரலாற்றை உள்ளடக்கிய சிறப்பு காணொளியும் விழாவில் ஒளிபரப்பப்பட உள்ளது.





