புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதை நூலை இந்தியாவில் வெளியிடுவதாக ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு முன், அந்த நூலை வெளியிட இருந்த பென்குயின் இந்தியா திட்டத்திலிருந்து விலகியது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா (79) தன் வாழ்க்கை வரலாற்றை Blanking: A Journey of Love என்ற பெயரில் எழுதியுள்ளார். இது 544 பக்கங்களாக தயாராகிறது.
சர்வதேச அளவில் இந்த நூலை அமெரிக்காவைச் சேர்ந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் நவம்பர் 10ல் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதன் துணை நிறுவனமான பென்குயின் இந்தியா வெளியிடும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கையெழுத்துப் பிரதியில் சில பகுதிகளில் மாற்றங்கள் செய்யவும், சிலவற்றை நீக்கவும் பென்குயின் இந்தியா கோரியதாகவும், அதை சோனியா ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் அந்த நூலை வெளியிட முடியாது என பென்குயின் இந்தியா அறிவித்தது. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்தது.
இதனால் நூல் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு சமூக வலைதளப் பதிவில், இந்த சுயசரிதையை இந்தியாவில் நவம்பர் 10ல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே பென்குயின் நிறுவனம் வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.





