சென்னை

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்திற்கு பராமரிக்கப்படுகின்றன என்பதை விளக்கி, டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, லஞ்ச புகார் தொடர்பான வழக்கு விசாரணையில் வெளியானது. சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சேர்ந்த சக்திவேல், ரேஷன் அரிசி கடத்த அனுமதிப்பதாக கூறி ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர் ராமராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர, புகார்தாரர் மற்றும் அவரது தாய் பயன்படுத்திய மொபைல் போன் பதிவுகள், மேலும் சேலம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆகியவற்றை பாதுகாக்க உத்தரவிடக் கோரி, உதவி ஆய்வாளர் சரவணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் 15 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 18 மாதங்கள் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டி, 15 நாட்கள் மட்டுமே பராமரிப்பது ஏன் என கேள்வி எழுப்பியது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படுகின்றன என்பதை விளக்கி டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.