தமிழகத்தில் யானை வழித்தடங்களை ஆய்வு செய்து அடையாளம் காண்ந்து, அதற்கான விரிவான அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

யானை வழித்தடங்களை கண்டறிந்து அரசாணை மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறந்தது. முன்னதாக, இந்த பணிக்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்றைய விசாரணையில், ஜவாலகிரி–தக்கட்டி, ஜவாலகிரி–அஞ்செட்டி, பில்லிக்கல்–ஜவாலகிரி ஆகிய மூன்று பகுதிகளை யானை வழித்தடங்களாக அறிவித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், குழு 41 பகுதிகளை யானை வழித்தடங்களாக அடையாளம் கண்டுள்ளதாக கூறிய முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வேணு பிரசாத், அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாமா என்பதை ஆய்வு செய்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், யானை வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை இறுதிப்படுத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.