சென்னை: கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பக்தர்களிடம் மொபைல் போனை ஒப்படைக்க கட்டாயப்படுத்த வேண்டாம் என கோவில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் 52 முதன்மை கோவில்களில் செப். 1 முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்பட்டது. மேலும் ரூ.5 கட்டணம் செலுத்தி மொபைலை பாதுகாப்பாக ஒப்படைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கை பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், பல்வேறு சிரமங்கள் உருவாகும் என ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வருவோரிடம் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
பக்தர்களின் வசதிக்காக தளர்வுகள் மேற்கொள்ளலாமா என்பது குறித்து அமைச்சர் துறை அதிகாரிகளுடன் கருத்துக் கேட்பு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில், 52 கோவில்களின் செயல் அலுவலர்களுக்கு சில வழிகாட்டுதல்களை அறநிலையத்துறை வழங்கியுள்ளது.
அதன்படி, லாக்கரில் மொபைல் வைக்கும்படி பக்தர்களை கட்டாயமாக சொல்ல வேண்டாம்; தானாக முன்வந்து வைப்போரிடம்தான் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விடுமுறைகளில் மொபைல் ஒப்படைக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பொருந்தும் வகையில் தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.





