கேரளாவின் கோட்டயம் அருகே சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 1 வயது பெண் குழந்தையின் விலா எலும்பு பகுதியில் ஊசி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் மருத்துவ அலட்சியம் நடந்ததாக புகார் அளித்துள்ளனர்.

கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூலையில் குழந்தை பிறந்ததாகவும், மஞ்சள் காமாலை காரணமாக சில மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் குடும்பத்தினர் கூறினர். வீடு திரும்பியதிலிருந்து குழந்தை தொடர்ந்து அழுததாகவும், வலது விலா எலும்பு அருகே வீக்கம் இருப்பதை கவனித்து மருத்துவர்களிடம் காட்டியதாகவும் தெரிவித்தனர்.

அப்போது அது சாதாரண வீக்கம் என்றும், குழந்தைகள் சில அசவுகரியங்களால் அழுவது இயல்பென்றும் மருத்துவர்கள் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் நாளடைவில் வீக்கம் அதிகரித்து, குழந்தை வலி தாங்காமல் தொடர்ந்து அழுததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலையில் குழந்தையை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஸ்கேன் பரிசோதனையில் விலா எலும்பு அருகே ஊசி இருப்பது தெரியவந்ததாகவும், பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்ததிலிருந்து கடந்த ஓராண்டில் வேறு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை என பெற்றோர் கூறி, கோட்டயம் மருத்துவமனையில் ஏற்பட்ட அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.