சிந்து நதிநீரை இந்தியாவின் தேவைக்காக சேமித்து பயன்படுத்தும் முயற்சியாக, லடாக்கின் உப்ஷி பகுதியில் ஆற்றின் குறுக்கே 10 அடி உயர தடுப்பணை ஒன்றை இந்தியா அமைத்துள்ளது. இந்த தடுப்பணை சிமென்ட் இன்றி இயற்கையான பாறாங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என இந்தியா கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்குள் பாயும் நீரை இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக வசந்த காலங்களில் நீர்மட்டம் குறைவாக இருப்பதும், ஒப்பந்தத்தின் கீழ் நீர் வெளியேறுவதும் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பயிரிடுவதில் சிரமம் சந்தித்து, விளைநிலங்கள் வறண்டு பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பணையில் 4 கோடி லிட்டர் வரை நீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட நீரை பாசனக் கால்வாய்கள் மூலம் வறண்ட கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சிந்து நதியில் இதுபோன்ற தடுப்பணைகளை அமைக்க லடாக் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.