ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் அறிவு, திறன், நற்பண்புகள் மற்றும் ஊக்கத்தை விதைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆசிரியர்களும் அவர்களை மரியாதை செய்யும் மாணவர்களும் சமூகத்திற்கு முன்மாதிரி எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளைப் போலக் கருதி அன்புடன் அணுகி, பாரபட்சமின்றி நியாயமாக வழிநடத்த வேண்டும் என்றார். மாணவர்களின் நலனே எப்போதும் முதன்மை எனவும், கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையுடன் நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாடத்திட்டத்தை கற்பிப்பதோடு ஆசிரியரின் பணி முடிவடைவதில்லை என்றும், தங்கள் முன்மாதிரியான செயல்பாடுகள் மூலம் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு தேவையான கலை மற்றும் திறன்களையும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர் வழிகாட்டி மட்டுமல்ல; நலம் விரும்பி, நண்பர், கற்றலுக்கான தேடலுக்கு துணை நிற்பவர் ஆகவும் இருக்க வேண்டும் என்றார்.
மாணவர்களிடையே சுய சிந்தனை, ஆர்வம், கேள்வி கேட்கும் மனப்பான்மை, விவாதிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்பது ஆசிரியர் பணியின் மனநிறைவு தரும் பரிமாணங்கள் என அவர் சுட்டிக்காட்டினார். இவ்வகை ஊக்கமளிக்கும் கல்வி மூலம் தொழில்முனைவோர், அறிவார்ந்த விஞ்ஞானிகள், படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை கண்டறியும் திறன் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை காக்க வேண்டும் என்றும், ஆசிரியரின் அணுகுமுறை குழந்தைகளில் அச்சம், பதற்றம் அல்லது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். சமூக உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சிப் பயணத்தில், கலாசார பாரம்பரியத்தை மதிக்கும், அறிவியல் மனப்பான்மையுடன் சமூக நலனுக்காக உழைக்கும், கடைக்கோடியில் உள்ளவர்களையும் கவனிக்கும், சுற்றுச்சூழல் மற்றும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும், ‘தேசத்திற்கு முன்னுரிமை’ உணர்வுடன் முன்னேறும் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.




