நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கால் நீர்மின் திட்ட சுரங்கத்தில் ஒன்பது நாட்களாக சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். விடாமுயற்சியுடன் பணியாற்றிய மீட்புப் படையினருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நேபாளம்–திபெத் எல்லைக்கு அருகிலுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பேரிடரே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. லாங்டாங் லிருங் சிகரத்தில் இருந்த பெரிய பனிப்பாறையின் ஒரு பகுதி ஆகஸ்ட் 26 அன்று சரிந்து விழுந்ததாகவும், அதனால் பனி, மண், பாறைகள் நதிக்குள் சரிந்து கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் லெண்டே கோலா நதியில் இருந்து திரிசூலி நதியுடன் இணைந்ததால், சீன–நேபாள எல்லையிலுள்ள கியிரோங் சோதனைச் சாவடி பகுதி உள்ளிட்ட இடங்களில் கிராமங்கள், பாலங்கள், சாலைகள் சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் உள்ள நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களுக்குள் தண்ணீர் மற்றும் சேறு புகுந்ததால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே சிக்கியதாக கூறப்படுகிறது.
மத்திய நேபாளத்தில் உள்ள திரிசூலி 3ஏ நீர்மின் திட்ட சுரங்கத்திலிருந்து மனிதக் குரல்கள் கேட்பதாக கண்டறிந்ததைத் தொடர்ந்து, நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுக்கள் பணிகளை தீவிரப்படுத்தினர். தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, சுரங்கத்தின் உள்ளே சுமார் 558 அடி தூரத்தில் சிக்கியிருந்த சஞ்சய் ஷா (30) மற்றும் கபீர் மகர்ஜன் (45) ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த மகர்ஜனை ஹெலிகாப்டரில் காத்மாண்டுவுக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்; ஷா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நாளில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்ததாக கூறிய ஷா, மற்றவர்களை வெளியேற வலியுறுத்திய பின்னர் தானும் வெளியேற முயன்றபோது சிக்கியதாக தெரிவித்தார்; நீண்ட சுரங்கம் என்பதால் மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.





