தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர்; ஆனால் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு கிடையாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தேசிய அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பிரதமர் வேட்பாளர் குறித்து பேச இன்னும் காலம் இருப்பதாக கூறினார். தவெக-காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும், “பிரதமர் விஜய்” என்ற தகவல் ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி மட்டுமே என்றும் தெரிவித்தார்.

சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, திங்கட்கிழமை முதல்வரின் பதிலுக்குப் பிறகு இரண்டு மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். தினமும் சட்டசபை 7 முதல் 8 மணி நேரம் நடைபெறுகிறது என்றும், அனைவருக்கும் பேச சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

கோவில் விவகாரங்களில் அரசின் தலையீடு இல்லை என்றும், முந்தைய அரசு செய்ததாக கூறப்படும் தவறுகளை தாங்கள் செய்யமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “நேரு வீட்டில்” நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது என்றும், சோதனை விவரங்களை துறைதான் தெரிவிக்கும் என்றும் கூறினார்.

வரும் தேர்தலில் அதிமுக-திமுக ஒரே கூட்டணியாக இணைந்து செயல்படும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். யார் யாருடன் சேர்ந்தாலும் தங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.