ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், தங்களின் சொத்து மற்றும் நிதி தொடர்பான விவரங்களை பக்தர்கள் பார்வைக்கு எளிதாக கிடைக்கும் வகையில் வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோவில் ஒன்றைச் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல் வழங்கப்படாதது தொடர்பான விசாரணையில், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தலைமையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அறநிலையத்துறையைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் தகவல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டு பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது. ஏஐ காலத்திலும் கோவில் நிர்வாகத் தகவல்களுக்கு 30 நாட்கள் காத்திருக்க வேண்டுவது வருத்தத்தக்கது என்றும் தெரிவித்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4-ஐ மேற்கோள் காட்டி, அனைத்து கோவில்களிலும் கோவில் சொத்துகள், வரவு-செலவு விவரங்கள், வைப்பு நிதி, நிரந்தர சேமிப்பு விவரம், உலோகப் பொருட்கள், உபயதாரர்கள் நன்கொடை விவரங்கள் உள்ளிட்டவை பக்தர்கள் பார்வையில் படும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த அறிவிப்பு பலகை அமைக்கவும், பூஜை மற்றும் திருவிழா விவரங்கள், பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பெயர்கள் ஆகியவற்றை தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் குழு தீர்மானங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளிட்டவை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





