காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்கள் கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி மது பாட்டில் திரும்ப வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதும், சமீபத்திய சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.
மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதைத் தடுக்க, மாதம் ரூ.10,000 ஊதிய உயர்வு மற்றும் கடை பராமரிப்புக்கான மாத செலவு தொகை உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கூடுதல் பணம் வசூலிப்பதாக கண்டறியப்படும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில் செப்.2 முதல் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகள் உட்பட பல இடங்களில் கடைகள் திடீரென மூடப்பட்டு போராட்டம் நடந்தது.
பணியாளர்கள் தரப்பில், கூடுதல் பணம் வசூலிப்பு குறித்த நடவடிக்கை முறையான ஆய்வின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், போதுமான சரிபார்ப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல என்றும் கூறப்பட்டது. மேலும் காலி பாட்டில்களை சேகரிக்கும் பணிக்கான செலவு பணியாளர்களே ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அதனால் அந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர், கருவிகள் மூலம் ‘ஸ்கேன்’ செய்து காலி பாட்டில் திரும்ப பெறும் பணிக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். அந்த முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும், காலி பாட்டில் பணியை காரணம் காட்டி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடுவோர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





