தமிழக அரசின் முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நியமனம் தொடர்பான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் இந்த விவகாரத்தை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய சர்ச்சை உருவானதாகவும் தகவல்.
நியமனம் குறித்து சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா என ராகுல் கேட்டதாகவும், அதைப் பற்றி தனக்குத் தெரியாது என வேணுகோபால் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒரு எம்.பி. மூலம் விசாரித்தபோது, “எனக்கே இப்போது தான் தெரியும்” என சிதம்பரம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சிதம்பரத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே தமிழக அரசு அவரை அந்தப் பொறுப்பில் நியமித்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மீண்டும் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சிதம்பரம் ஆதரவாளர்கள், சட்ட வல்லுநராக அவரது பங்கு தமிழக அரசின் சட்ட விவகாரங்களில் இயல்பாகவே முக்கியத்துவம் பெறும் என்றும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனுபவம் மாநிலத்திற்கு பயனளிக்கும் என்றும் கூறி, இதை சர்ச்சையாக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.




