புதுடில்லி: டிசம்பர் 14, 15 தேதிகளில் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின்போது, அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் இருக்கும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறினார்.

ஜி20 மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 35 தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை நண்பராகக் கருதுவதால் இந்த சந்திப்பு வழக்கமான குழு பேச்சுவார்த்தையைத் தாண்டி பல்வேறு விஷயங்களை உள்ளடக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்ததை டிரம்ப் அடிக்கடி நினைவுகூர்வதாகவும், பிரதமர் மோடியைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசுவதாகவும் கோர் கூறினார். இரு தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட நல்லுறவும், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக துறையில் இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதற்கான பேச்சுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இருதரப்பு வர்த்தகம் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அதை ரூ.47 லட்சம் கோடியாக உயர்த்த பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், பாதுகாப்புத் துறை உறவு வெறும் விற்பனை சார்ந்தது அல்ல; நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என அவர் விளக்கினார். அமெரிக்க அரசு பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியாவுக்கு வருவதாகவும், வரும் அக்டோபரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மீண்டும் இந்தியா வர உள்ளதாகவும்—குறுகிய காலத்தில் இருமுறை வருவது அரிதானது எனவும் அவர் தெரிவித்தார்.