த.வெ.க. கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் செப். 9 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் பேசப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. த.வெ.க. கூட்டணியில் ம.தி.மு.க.வும் இணைந்துள்ளது.
செப். 9 கூட்டத்திற்காக த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று இ.கம்யூ. மற்றும் மா.கம்யூ. கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கு முன் ஜூலை 1 அன்று விஜய் தலைமையில் நடந்த தலைவர்கள் கூட்டத்தில் இரு கம்யூ. கட்சிகளும் பங்கேற்கவில்லை.
இ.கம்யூ. தமிழக செயலர் வீரபாண்டியன், த.வெ.க. அமைச்சரவையிலும் த.வெ.க. கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறவில்லை; இடம் பெற மாட்டோம் என்றும், செப். 9 கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் மத்தியில் பா.ஜ. அரசு நீடிக்கக் கூடாது என்பதற்காக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து, ‘இண்டி’ கூட்டணியை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார்.
இதற்கிடையில், சென்னை அண்ணா நகரில் த.வெ.க. அமைச்சர்கள் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவை சந்தித்தனர். கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என வைகோ கூறி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு, அமைச்சர்களின் பதிலளிக்கும் திறன், முதல்வர் விஜயின் ஆங்கில உரை மற்றும் ஊழல்-கமிஷன் நடைமுறைகளை ஒழிப்பதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டினார்.




